மெலானியா டிரம்ப்பின் டெல்லி பள்ளி நிகழ்ச்சி: கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு அழைப்பில்லை?

டெல்லி: டெல்லி அரசுப் பள்ளியை பார்வையிடும் மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு அழைப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோர் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றனர். இது ஒரு அரசுமுறைப் பயணம் ஆகும்.

பயணத்தின்போது அவர்கள் டெல்லி மற்றும் அகமதாபாத் செல்கின்றனர். இதையடுத்து டிரம்ப்பும்,  பிரதமர் மோடியும் பிப்ரவரி 25ம் தேதி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இதனிடையே, மெலானியா தெற்கு டெல்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் செல்கிறார். அங்கு ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிழ்ச்சி வகுப்பை பார்வையிடுகிறார். மகிழ்ச்சி வகுப்புகள் குறித்து மாணவர்களுடன் கேட்டறியும் அவர், 1 மணி நேரம் அங்கு இருப்பார்.

நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவும் மெலானியா டிரம்பை வரவேற்று நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என முன்னதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், மெலானியா பள்ளிக்கு நிகழ்ச்சிக்கு கெஜ்ரிவாலுக்கும், மணிஷ் சிசோடியாவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன.