பாலியல் வன்கொடுமை புகார்: பிஷப் பிராங்கோ 2து நாளாக காவல்துறை விசாரணைக்கு ஆஜர்
கொச்சி:
கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேராயர் பிராங்கோ கொச்சி காவல்துறையில் இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.
கன்னியாஸ்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜலந்தர் ஆயர் பிராங்கோ மீது மாநில காவல்துறை விசாரித்து வருகிறது. நேற்று சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாகவும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கொடுத்தார். தொடக்கத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநிலம் முழுவதும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கொச்சி அருகே உள்ள திருப்புணித்துறா போலீஸ் நிலையத்தில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
பகல் 11 மணிக்கு போலீஸ் நிலையம் சென்ற அவரிடம் கோட்டயம் எஸ்.பி. ஹரிக்குமார், வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது. சுமார் 7 மணி நேரம் நீடித்த விசாரணையில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்த இன்றைய விசாரணைக்கும் வர கூறியிருந்தனர். அதன்படி இன்றும் பிஷப் பிராங்கோ காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.