வீட்டு மொட்டை மாடியில் “தாங்ஸ்”: உதவிக்கு நன்றி தெரிவித்த கேரள மக்கள்

கொச்சி:

டந்த 20 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள், தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டு மொட்டை மாடியில் தாங்ஸ் என்று வெள்ளை நிற பெயிண்டால் எழுதி உள்ளனர்.

இந்த சம்பவம் அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், நிவாரண பணிகளை மேற்கொண்ட முப்படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடைய  ஊக்கத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத பேய் மழை காரணமாக திருவனந்தபுரம் தவிர ஏனைய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெரும்பான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.  ஆங்காங்கே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினர் நிலத்திலும், கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது.  இந்த நிலையில், கொச்சி பகுதியில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ‘THANKS’ என எழுதப்பட்டுள்ளது.

இதைக்கண்ட கடற்படையினர், அந்த பகுதியை புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளனர்.

மேலும், இதுகுறித்து விளக்கமளித்துள்ள கடற்படை செய்திதொடர்பாளர், தேங்ஸ் என்று எழுதப்பட்டுள்ள வீட்டிலிருந்த இரண்டு பெண்களை கமெண்டர் விஜய் வர்மா ஹெலிகாப்டரில் காப்பாற்றினார்.  அதற்கு நன்றி தெரிவித்து அந்த வீட்டில் இருப்பவர்கள் இவ்வாறு எழுதி வைத்துள்ளனர். இது தங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என்று கூறினார்.