திருவனந்தபுரம்: கேரள கோவில்களிலும் பூஜை செய்ய  பட்டியலினத்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது கேரள  தேவசம் போர்டு  தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில்  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2006ஆம் ஆண்டு  கொண்டு வரப்பட்டது. அதையடுத்து பல கோவில்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகருக்கான பயிற்சி பெற்று பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலத்திலும் தமிழகத்தைப்போல அனைத்துச் சாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களில் பகுதிநேர அர்ச்சகர்களாகப் பட்டியல் வகுப்புகளைச் சேர்ந்த 19 பேரை நியமிக்க உள்ளதாகக் கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகம விதிகளைப் பயின்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தைப் போலவே கேரளத்திலும் எழுந்துள்ளது. இதையடுத்துப் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 19 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கத் திருவாங்கூர் தேவசம் வாரியம் முடிவு செய்துள்ளது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.