கேரளாவில் மின் கட்டணங்களில் மானியம்: 70% செலுத்தினால் போதும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம்  முடிவு செய்துள்ளது.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து, கேரளாவிலும் இந்த  நிலை காணப்படுவதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க அம்மாநில மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண மானியம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை ரூபாய் மானியம் என்பதை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும். அதுவரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வீட்டுவேலை செய்வோர், ஏழை, எளிய மக்கள் பயன்பெற  மின் கட்டணத்தை 5 தவணைகளில் செலுத்தலாம் என்றும் கேரளா மின்வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது.