ரோபோ அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்த ஆட்டோ டிரைவர்!!

கொச்சி:

கேரளா மாநிலம் கொச்சி அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் ஆழமான மூளை தூண்டுதல் பிரிவில் ரோபோ உதவியுடன் 45 வயதாகும் ஆட்டோ டிரைவரின் உயிர் காக்கப்பட் டுள்ளது.

அவர் கடந்த 10 ஆண்டுகளாக மூளை நரம்பு சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இவரை தான் மருத்துவ குழுவினர் ரோபோ உதவியுடன் சிகிச்சை அளித்து அவரது உயிரை மீட்டுள்ளனர். ஆழமான மூளை தூண்டுதலில் ஆசியாவிலேயே முதன்முதலாக ரோசா (ஆர்ஓஎஸ்ஏ) என்ற ரோபோ மூலம் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அமிர்தா மருத்துவமனை மூளை நரம்பியல் துறை பேராசிரியர் அசோக் பிள்ளை கூறுகையில், ‘‘மூளை நரம்பில் ஏற்பட்ட சிதைவு முதன்முதலாக ரோபோ மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சரி செய்யப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே முதல் அறுவை சிகிச்சையாகும்’’ என்றார்.

நோயாளி ஜூபிளட் ஜூபைர் கூறுகையில்,‘‘ பல ஆண்டுகளுக்கு பிறகு எனது குடும்பத்தினருடன் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சினிமா பார்க்க முடிகிறது. நோய் காரணமாக பொது நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு என்னால் செல்ல முடியாமல் இருந்தது’’ என்றார்.

ஏழ்மையான ஆட்டோ டிரைவரான இவரது வருமானத்தை நம்பி தான் குடும்பம் இருக்கிறது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற ஜூபைரிடம் போதுமான பண வசதி இல்லை. இந்த நோய் காரணமாக அவரால் ஆட்டோ சரியாக ஓட்ட முடியாத நிலை இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.