கேரளா : விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும்  ஓய்வூதியம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

திருவனந்தபுரம்

கேரள சட்டப்பேரவையில் விவசாயிகளின் நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது.

நாடெங்கும் விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.  அனைத்து எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்குச் சரியான விலை அளிக்க வேண்டும் என மத்திய அரசை வெகு நாட்களாக கேட்டு வருகின்றன.  மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்

மாநிலங்களில் முதல் முறையாகக் கேரள சட்டப்பேரவையில் ஒரு திட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  விவசாயிகள் நலனுக்காக  இயற்றப்பட்ட மசோதா மாநிலத்தில் ஏற்கனவே பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு இறுதி வடிவம் அடைந்துள்ளது.   அதன் பிறகு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த மசோதாவின்படி மாநிலங்களில் முதன் முறையாக விவசாயிகள் நல வாரியம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.  இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும்  பொருளாதார வசதி ஆகியவற்றில் முன்னேற்றம் காணும் திட்டங்கள் செயல்படுத்தப் பட உள்ளது.  மேலும் இந்த வாரியம் விவசாயிகளுக்கு மகளின் திருமணத்துக்கு, குழந்தைகள் கல்விக்கு, மகப்பேற்றுக்கு நிதி உதவி மற்றும் வயதான காலத்தில் ஓய்வூதியம் வழங்கவும் திட்டம் இயற்ற உள்ளது.

இந்த வாரியத்தின் உதவியைப் பெற 15 ஏக்கருக்குக் குறைவான நிலம் உடைய அல்லது 15 ஏக்கருக்கும் குறைவான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் விவசாயிகளுக்குத் தகுதி உண்டு.   18 வயதைத தாண்டிய ஒவ்வொரு விவசாயியும் மாதா மாதம் குறைந்தது ரூ.100 இந்த திட்டத்தில் செலுத்த வேண்டும்.  அரசின் சார்பில் விவசாயிகள் செலுத்தும் அதே தொகை வழங்கப்படும்.    இவ்வாறு 5 வருடம் தொடர்ந்து பணம் செலுத்தும் விவசாயிக்கு 60 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் செலுத்திய தொகையின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.