கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்

டெல்லி: கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். 5 மாநிலங்களில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இது குறித்து சுனில் அரோரா கூறியதாவது: கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20ம் தேதி நடைபெறும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19ம் தேதி கடைசி நாளாகும். மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 6ம் தேதி கேரளா முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும். அந்த தொகுதிக்கும் மே 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்று கூறினார்.