திருவனந்தபுரம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசைக் கோரி இன்று கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது.

நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.  அத்துடன் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.   பாஜக ஆட்சி புரியாத கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த சட்டத் திருத்தம் மற்றும் குடிமக்கள் பதிவேட்டை அமல் படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன.

இதையொட்டி இன்று கேரள மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது.  இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பிணராயி விஜயன் மத்திய அரசு குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பட்டியல் ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரிக்கை தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

தீர்மானத்தைத் தாக்கல் செய்த பிணராயி விஜயன், “இந்த சட்டம் மதச்சார்பின்மைக்கும் நாட்டின் கூட்டமைப்புக்கும் எதிரானது.  இதனால் குடியுரிமை வழங்குவதில் மதரீதியான வேறுபாடுகள் நிலவ வாய்ப்புள்ளது.  இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படைக்கும் கொள்கைக்கும் எதிரானதாகும். நாடெங்கும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பின்படி இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த தீர்மானத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சட்டப்பேரவையின் ஒரே பாஜக உறுப்பினரான ஓ ராஜகோபால் இந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதால் அதை எதிர்ப்பது சட்ட விரோதம் என அவையில் தெரிவித்துள்ளார்.