திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற  கூட்டம் இன்று காலை கூடியது. இந்த சிறப்பு கூட்டத்தில், மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பஞ்சாப், மேற்குவங்கம், டெல்லி  உள்பட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது கம்யூனிஸ்டு ஆட்சி செய்யும் கேரள மாநிலத்திலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் கேரள மாநிலத்தில் இருந்து சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே பாஜக எம்எல்ஏவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மத்தியஅரசின் சட்டத்துக்கு எதிராக  சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றி  வருகின்றன. அதன்படி கேரளாவிலும் சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி,   டிசம்பர் 24ந்தேதி அன்று சிறப்பு சட்டமன்றம் கூட்டப்படும் என அறிவித்த நிலையில், மாநில கவர்னர் அதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து,  டிசம்பர் 31ந்தேதி சிறப்பு கூட்டத்தை கூட்ட அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில், இன்று காலை  கேரள மாநில சிறப்பு சட்டமன்றம் கூடியது. இதில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறக் கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட சட்டமன்றத்தில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்வும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.