ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு : பாஜக சார்பில் கேரளாவில் முழு அடைப்பு

திருவனந்தபுரம்

பரிமலை பக்தர் ஒருவர் தீக்குளித்ததை ஒட்டி கேரள பாஜக மாநிலத்தில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதிக்கப்பட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து கடும் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. சபரிமலை கோவிலுக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கேரள மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதை ஒட்டி சபரிமலை மற்றும் சுற்றுவடார பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் அருகே கேரள பாஜக தலைவர் பத்மநாபன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்துக்கு அருகாமையில் வேணுகோபாலன் நாயர் என்னும் ஐயப்ப பக்தர் 144 தடை உத்தரவை விலக்கக் கோரி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போதுஅவர் ஐயப்பா ஐயப்பா என கோஷமிட்டதாக கூறப்பட்டது.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 3.30 மணிக்கு வேணுகோபாலன் நாயர் மரணம் அடைந்தார். இது ஐயப்ப பக்தர்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அரசின் இந்த போக்கை கண்டித்து கேரள பாஜக இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சபரிமலைக் கோவில் கடந்த நவம்பர் மாதம் மண்டல பூஜைக்காக திறந்த பிறகு இது பாஜக நடத்தும் நான்காவது முழு அடைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை நுழைவாயில் என கருதப்படும் நிலக்கல் பகுதியில் ஒரு ஐயப்ப பக்தர் இறந்து கிடந்ததை ஒட்டி கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முழு அடைப்பு நடைபெற்றது. அதன் பிறகு இந்து அமைப்பு தலைவி சசிகலா கைதை எதிர்த்து நவம்பர் 17 ஆம் தேதி மற்றொரு முழு அடைப்பு நடந்தது. மூன்றாவதாக நடந்த அடைப்பின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் மோதல் உண்டானது குறிப்பிடத்தக்கது.