கொச்சி:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக வளர்த்த நெல்லிக்காய் மரம் திடீரென்று இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். இரண்டு அடிக்கு வளர்ந்திருந்த அந்த மரத்தை யாரோ அப்படியே உடைத்து எடுத்து சென்றிருக்கிறார்கள்.
தான் பயிரிட்ட மரத்தில் நெல்லிக்காய் வளர்வதற்காக காத்துக்கொண்டிருந்த அந்த 12 வயது சிறுவன் மிகவும் சோகமடைந்திருந்தான், ஆனால் மறுநாளே அவனும் அவனது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டின் முன்பு 9 புதிய மரக்கன்றுகளுடன் காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.
துக்கமடைந்து சிறுவனை சமாதானப்படுத்துவதற்காக காவல் அதிகாரிகள் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தார்கள். தான் வளர்த்த மரம் காணாமல் போனதை கண்ட சிறுவன் பவன்,  குழந்தைகளின் மன நலனுக்காக உதவுவதற்காக கேரள அரசால் தொடங்கப்பட்ட குழந்தைகள் அமைப்பான ‘சிரி’க்கு அழைப்பு விடுத்து தன்னுடைய மரம் காணாமல் சென்று விட்டதை தெரிவித்திருக்கிறான், சிரியின் உயரதிகாரிகள் இந்த வழக்கை எடுத்து நாரக்கல் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர், நாரக்கல் காவல் நிலையத்தின் உயர் அதிகாரியின் கட்டளையின் பேரில் காவல் அதிகாரிகள் பவனின் வீட்டிற்கு 9 மரக்கன்றுகளை எடுத்து சென்றுள்ளனர்.
சிறுவனான பவன் மிகவும் சோகமாக இருந்தான், ஆனால் அவன் சிரி அதிகாரிகளை அழைத்தது தனக்கு தெரியாது என்றும் அவனின் தாய் தெரிவித்துள்ளார்.
மேலும் இதைப் பற்றி பேசிய சிறுவன் பவன் தெரிவித்ததாவது இப்போது எனக்கு ஒன்பது மரக்கன்றுகள் கிடைத்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆனால் நான் வளர்த்த நெல்லிக்காய் மரம் இன்னும் சிறிது காலங்களில் எனக்கு நெல்லிக்காயை தந்திருக்கும், அது மட்டும் எனக்கு சிறிது வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
நாரக்கல் காவல் அதிகாரிகள் அவனுக்கு நெல்லிக்காய் மரக்கன்றுகளுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கொய்யா மரக்கன்றுகளையும் பரிசளித்திருக்கின்றனர், மேலும் இதைப் பற்றி அறிந்த கேரளாவின் சிசிடிவி நிறுவனம் பவனுடைய மரங்களை யாரும் எடுத்து சென்று விடக்கூடாது என்பதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராவையும் பரிசாக கொடுத்திருக்கிறது.