திருவனந்தபுரம்:

‘‘அரசு உபரி நிலத்தை தனியாருக்கு வழங்கிய முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தும்’’ என்று கேரளா முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு உபரி நிலத்தை தனியாருக்கு வழங்கியதில் அரசியல் கட்சியினர், இடைத்தரர்களுடன் சில அரசு அதிகாரிகள் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் கேரளாசட்டமன்றத்தில் எதிரொலித்தது.

இந்த நில முறைகேட்டில் சிபிஐ தலைவர்கள், வயாநாடு மாவட்ட துணை கலெக்டர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக மலையாள டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விசாரணை நடத்த வலியுறுத்தியது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ளும் என்று முதல்வர் பினராய் விஜயன் சட்டமன்றத்தில் அறிவித்தார். சிபிஎம் தலைமையிலான ஆட்சியில் சிபிஐ 2வது பெரிய கட்சியாக உள்ளது.

இது குறித்து முதல்வர் மேலும் பேசுகையில்,‘‘ ஊழலை ஒழிக்க அரசு அனைத்து அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. இன்னும் சில ஊழியர்கள் தங்களது பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. அரசு மீது இது வரை எவ்வித ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை. தற்போது இப்பிரச்னை எழுந்துள்ளது. ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து துணை கலெக்டர் சேமாநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நில ஆணையர் தலைமையில் துறை ரீதியான விசாரணை நடத்த வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.