திருவனந்தபுரம்

நாடெங்கும் குடியுரிமை பட்டியல் அமுல்படுத்த உள்ளதாக பாஜக அறிவித்ததற்கு அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும் என கேரள கிறித்துவ சங்கம் கூறி  உள்ளது.

பாராளுமன்றத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள தேசிய குடியுரிமை பட்டியல் மசோதாவின் படி வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து குடியேறிய இஸ்லாமிய அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   இந்த மசோதாவுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது

பாஜக நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்  “நாடெங்கும் தேநிய குடியுரிமை பட்டியலை அமுலாக்குவோம் என உறுதி அளிக்கிறோம்.   நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.  இந்துக்கள், புத்தர்கள் சீக்கியர்கள் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள்” என அறிவித்துள்ளது.

இதற்கு நாடெங்கும் உள்ள சிறுபானமியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது குறித்து கேரள கிறித்துவர் சங்கம், “பாஜகவின் இந்த அறிக்கை நமது நாடு மதசார்பற்றது என்னும் அடையாளத்தின் மீது நடந்த நேரடி தாக்குதல் ஆகும்.    இது நமது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவாலாகும்.   இதற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மன்னிப்பு கோர வேண்டும்” என அறிவித்துள்ளது.