திருவனந்தபுரம்:

யோகா செய்வதற்கான வழிமுறை கையேட்டை கேரள பிஷப் கவுன்சில் வெளியிட்டுள்ளது.


யோகா உண்மையிலேயே மத சார்பற்றதா அல்லது சிலர் உரிமை கொண்டாடுவது போல் குறிப்பிட்ட மதத்தக்கு சொந்தமானதா என்பது குறித்து கேள்விகளுக்கு, கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் பதில் அளித்துள்ளது.

யோகாவுக்கு தேவாலயங்கள் எதிரானவை அல்ல. உண்மையிலேயே நாங்கள் வரவேற்கிறோம்.
கிறிஸ்தவர்கள் யோகாவை செய்வதற்கான வழிகாட்டு முறைகளை வகுத்துள்ளோம் என்கிறார் பிஷப் கவுன்சிலின் இறையியல் கமிஷன் செயலாளர் ஸ்டான்லி மதிரப்பள்ளி.

அவர் மேலும் கூறும்போது, இந்து மதம், புத்த மதம்,ஜெயின் மதத்திலிருந்து யோகாவை அணுகி வருகிறோம்.

இருந்தாலும், கிறிஸ்தவ மத அடிப்படை மாறாமல் யோகா செய்வது குறித்து வழிமுறைகளை வகுத்துள்ளோம்.

ஒரு கிறிஸ்தவர் யோகா செய்கிறார் அவ்வளவுதான். அதற்காக கிறிஸ்தவ யோகாவாகிவிடாது. எனினும் கிறிஸ்தவ வழிகாட்டுதல் படியே யோகா இருக்கும்.
இது தொடர்பாக 27 பக்கங்கள் கொண்ட வழிகாட்டுதல் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய இசை மற்றும் நடனம் கிறிஸ்தவத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது போல், யோகாவும் மாற்றப்படும்.

நல்லது எங்கிருந்து வந்தாலும், அதை எடுத்துக் கொள்வது தவறில்லை. நமது மத அடிப்படையை மட்டும் மறக்காமல் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

கடந்த 1985-ம் ஆண்டிலிருந்து சகோதரி குழந்தை தெரசா யோகாவை மக்களுக்கு கற்பித்து வருகிறார்.

இந்துக்கள் தியானத்தின்போது சூர்ய நமஸ்காரம் செய்வார்கள். கிறிஸ்தவர்கள் யேசுவின் உருவத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்யலாம் என்று சகோதரி தெரசா பரிந்துரைத்துள்ளார்.

மனதை ஒரு நிலைப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் யோகா உதவும் என்றார்.