சபரிமலை தீர்ப்பை உடனடியாக அமல்படுத்துங்கள்.. தேவசம் போர்டுக்கு முதல்வர் உத்தரவு

யதுபேதமின்றி சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கேரள தேவசம் போர்டுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருக்கிறார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய போவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

அதே நேரம், உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்துவது என்ற முடிவில் தேவசம் போர்டு இருக்கிறது.

இந்த நிலையில் பெண்களை எப்போது அனுமதிப்பது என்பது குறித்தும் அவர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என தேவசம் போர்டு கேட்டுக் கொண்டது. ஆனால் முதல்வரோ உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில்  கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்தின்,  “சபரிமலைக்கு வருகை தரும் பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும். பம்பையில் பெண்கள் குளிக்க தனி இட வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படும். பாதுகாப்புக்கு கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.  சபரிமலைக்குச் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25% இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
இனி சபரிமலை சன்னிதானத்துக்கு  பக்தர்கள் பதினெட்டு படி ஏறி தினம் முடித்து நெய்யபிஷேகம் செய்து திரும்பி விட வேண்டும். சன்னிதானத்தில் தங்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.