சபரிமலையில் பாதுகாப்பு குளறுபடி : விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்

சித்திரை ஆட்ட திருவிழா சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு குளறுபடி நடந்ததாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தவிட்டுளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒட்டி இளம் பெண் கள் சபரிமலைக்கு வருவதை பக்தர்கள் தடுத்து வருகின்றனர். ஐப்பசி மாதம் நடைதிறப்பின் போது வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி அன்று சித்திரை ஆட்ட திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

அந்த சமயத்தில் வரும் இளம் பெண்களின் நலனுக்காக கேரள அரசு காவல்துறை பாதுகாப்பை அரசு பலப்படுத்தியது. அந்தப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போராட்டம் நடக்கலாம் என்னும் ஐயத்தினால் பக்தர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் அந்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகின்றன.

சபரிமலையில் ஒரு 52 வயதான பெண்ணும் அஞ்சு என்னும் ஒரு பெண்ணும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டனர். இதில் அஞ்சு என்னும் பெண் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். போலீசார் இருந்தும் இவ்வாறு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. எப்போதும் 18 படிகளில் நின்று படியேறும் பக்தர்களுக்கு உதவும் காவல்துறையினர் சம்பவத்தன்று தென்படவில்லை.

மேலும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் புகார் எழுந்தது. தகவலறிந்த முதல்வர் பிணராயி விஜயன் உடனடியாக இது குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டுளார். இதை அடுத்து காவல்துறை அதிகாரி அஜித்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.