திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு விவகாரத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பாஜக அல்லாத 11 முதலமைச்சர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்  வலுப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.

இந்த குடியுரிமை ச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது பட்டியலில் உள்ளதால், மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாடாளுமன்றம் மட்டுமே தனி அதிகாரம் படைத்தது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி இருந்தார்.

இந் நிலையில் பாஜக அல்லாத 11 முதலமைச்சர்களுக்கு பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:

குடியுரிமை சட்டத்தின் விளைவாக நமது சமூகத்தின் பெரும் பிரிவினரிடையே கருத்துக்கள் அதிகரித்துள்ளன. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் மதிப்புகளைப் பாதுகாக்க அனைத்து இந்தியர்களிடையேயும் ஒற்றுமை என்பது காலத்தின் தேவை.

சமூகத்தின் பல்வேறு குறுக்குவெட்டுகளைச் சேர்ந்தவர்கள், எந்தவொரு வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் நமது அரசியலின் அடிப்படை கொள்கைகளைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக நிற்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்பதை சுட்டிக்காட்டிய பினராயி, CAA ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட மாநிலங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளலாம். இதனால் CAA மற்றும் NRC இன் ஆதரவாளர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, பீகார், டெல்லி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்களுக்கு அவர் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.