திருவனந்தபுரம்

கேரளாவை ஓகி புயல் தாக்கும் என ஐதராபாத் வானிலை மையம் அறிவிக்கவில்லை என கேரள முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கக் கடலில் இலங்கை அருகில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது.  இந்தப் புயலுக்கு வங்க அரசு ஒகி என  பெயர் சூட்டியது.  கன்யாகுமரி நோக்கி நகர்ந்து வந்த ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி தற்போது நகர்ந்துள்ளது.

இந்தப் புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின.  தற்போது இது லட்சத்தீவை நோக்கி நகர்வதால் கேரளாவில் கடும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  ஆங்காங்கே மரங்களும், மின் கம்பங்களும் சரிந்த் விழுந்துள்ளன.

கேரள முதல்வர் பினராயி விஜயன், “இந்த ஒகி புயல் குறித்து எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் ஐதராபாத் வானிலை மையம் மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை.  நேற்று பகல் தான் புயல் குறித்து எச்சரிக்கை வந்தது.  அதனால் சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.  மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைக்கு வந்து சேரவில்லை.  இதுவரை 30 மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர்.  அவர்களை கேரள கடலோரக் காவல் படை தேடி வருகிறது” என தெரிவித்துள்ளார்.