மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க மாநில அரசு முயற்சி: முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்:

யப்பன் கோவில் விவகாரத்தில், மாநில மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள மாநில அரசு திட்டமிட்டு உள்ளது என்று முதல்வர் பிரனாயி விஜயன் மீது முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி குற்றம் சாட்டி உள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

ஐயப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,  உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த பிரனாயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்டு மாநில அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து 3 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   கேரளா மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாகும். இங்கு அனைத்து தரப்பு மக்களும் விழாக்களை இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.

அதேவேளையில் மத வேறுபாடு இல்லாமல் சபரிமலை கோவிலுக்கும் அனைவரும் சென்று வருகிறார்கள். இதுnபான்ற அதிசயம்  கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால், கம்யூனிஸ்டு அரசு மாநில மக்களிடையே நிலவி வரும் ஒற்றுமையை சீர் குலைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மத பிரச்சினைகளை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாள நினைக்கிறது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் அங்கு காலம், காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கும் வழக்கத்தையே இனியும் பின்பற்றலாம்.

கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கம்யூனிஸ்டு அரசு சபரிமலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தேவசம்போர்டு தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் போல மாறிவிட்டது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.