திருவனந்தபுரம்

பிரதமர் மோடிக்கு ஆதரவான ஜெய்ராம் ரமேஷின் கருத்தை வரவேற்ற  சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் பிரதமர்  மோடியை புகழ்ந்து பேசினார். அவர் எதற்கெடுத்தாலும் மோடியைக் குற்றம் சொல்வது தவறு எனவும் அவர் தனது பிரதமர் பணியை நன்கு செய்வதால் மீண்டும் மக்களின் பேராதரவுடன் பிரதமர் ஆகி உள்ளதாகத் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சையை அதிகரிப்பது போல்  ஜெய்ராம் ரமேஷ் கருத்தை சசி தரூர் வரவேற்றார்.

ஜெயராம் ரமேஷ் கூறியது சரியானது எனவும் நரேந்திர மோடி  செய்துள்ள நன்மைகளைப் புகழாவிட்டால் அவர் செய்யும் தவறுகளை விமர்சிப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என சசி தரூர் கருத்து தெரிவித்தார். தற்போது கேரளாவில் உள்ள பலா தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சசி தரூரின் இந்த கருத்து கேரள மாநிலத்தில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டி  என் பிரதீபன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் சசி தரூர் பெயரைக் குறிப்பிடாமல், “மோடியின் ஜனநாயகமற்ற கொடுங்கோல் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவரைப் பற்றி நற்சான்றிதழ் வழங்குவதால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் நமது போராட்டம் பலவீனமடையும்.

பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி. அவரது ஆட்சியால் இந்தியர்கள் ஏராளமான  துயரை அனுபவித்துவ்ருகின்றனர். அவர் அறிமுகப்படுத்தியுள்ள நன்மை தரும் திட்டங்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் கட்சியின் திட்டங்களே ஆகும். அவ்வாறு இருக்க மோடியைப் புகழ்வது நமது கட்சியைப் பலவீனப்படுத்துவது மட்டுமின்றி மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அழித்து விடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.