பிஃபா உலக கோப்பையை வென்ற கேரள தம்பதிகள்

உலக கோப்பையை மாதிரியாக கொண்டு கேரளாவை சேர்ந்த தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். பிஃபா உலக கோப்பை போட்டி கால்பந்து ரசிகர்களை நாளுக்கு நாள் தன் வசம் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இந்தியாவில் கால்பந்து போட்டிக்கு என்று அதிகளவில் ரசிகர்களை கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. கால்பந்து வெறியர்களான ஜோபின் மற்றும் ஐரீன் தங்கள் திருமண அலங்காரங்களை அர்ஜெண்டினா அணியின் நிறத்திலேயே அமைத்துள்ளனர்.
arjentina
திருச்சூரில் உள்ள மேரி தேவாலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் அனைத்தும் உலக கோப்பையை மையப்படுத்தியே அமைந்தன. அர்ஜெண்டினா அணியின் கொடி நிறத்தில் திருமண அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை மற்றும் நீல நிறத்தில் ஹால், பேனர்கள், பதாகைகள், நாற்காலிகள் மற்றும் பலூன்கள் அலங்கரிக்கப்பட்டன.
cake
இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்த ஜினு கூறுகையில் “ திருமணத்திற்கு வரும் பெரும்பாலானோர் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ரசிகர்களாக உள்ளனர். அவர்களை கவரும் வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அர்ஜெண்டினா கொடியின் நிறத்தில் பலூன்கள், கேக் மற்றும் பேனர்கள் அலங்கரிக்கப்பட்டன” என்று கூறினார். இதற்கு ஏற்றார்போல் திருமணத்திற்கு வந்த ஜோபினின் நண்பர்கள் மணமக்களுக்கு பிஃபா உலக கோப்பை(மாதிரி)யை பரிசாக அளித்து மகிழ்ந்தனர்.
hall
இதேபோல் மே -27ம் தேதி திருமணம் செய்த மோனிஷா மற்றும் ரோஷன் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு வித்யாசமாக ஏதாவது செய்ய விரும்பினர். திருச்சூரில் வித்யாசமாக புகைப்படம் எடுக்கும் ரோஷனை அணுகியுள்ளனர். அவர்கள் கால்பந்து ரசிகர்கள் என்பதால் அதனை மையப்படுத்தி புகைப்படம் எடுக்க திட்டமிட்டனர். மோனிஷா அர்ஜெண்டினா அணியின் நிறமான வெள்ளை மற்றும் நீலம் கலந்த உடையையும், ரோஷன் பிரேசின் அணியின் மஞ்சள் நிறத்திலான உடையையும் அணிந்தனர். புல்வெளியில் மழை சாரலில் இருவரும் பந்தை உதைக்கும் புகைப்படங்கள் கால்பந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
brazil
இது குறித்து ரோஷன் பேசுகையில், “ இவ்வாறு நடக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. ஏதாவது வேடிக்கையாக செய்ய விரும்பினோம். கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் அதனை மையப்படுத்தி புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டோம். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாவக்காடு கிராமத்தில் உள்ள புல்வெளியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன” என்று கூறினார்.