கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் கைதான பிஷப்பின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் கைதான பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

bishop

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி பிராங்கோ ஆஜராகினார். வைக்கம் துணை காவல் கண்காணிபாளர் அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிஷப் பொறுப்பில் இருந்து பிராங்கோ முல்லக்கல் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் நகரில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனை அதிகாரிகள் அறிவித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தன்னை ஜாமினில் விடுவிக்குமாறு முல்லக்கல் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது காவல் முடிவடைந்ததால் போலீசார் இன்று அவரை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிராங்கோ முல்லக்கல்லின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

You may have missed