கொச்சின்: கேரள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு 7 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில், அவருக்கான வாய்ப்புகளை அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது கேரள கிரிக்கெட் சங்கம்.

எதிர்வரும் உள்ளூர் கிரிக்கெட் சீசனில் அவருக்கு வாய்ப்பளிக்க தயாராய் இருப்பதாய் கூறியுள்ளது.

“கடினப் பயிற்சி மற்றும் கடின முயற்சியின் மூலம், விளையாட்டின் மீது தனக்குள்ள ஆர்வத்தை நிரூபித்துள்ளார் ஸ்ரீசாந்த். நாங்கள் அவருடன் தொடர்பில்தான் இருந்‍தோம். நாங்கள் அவரைப் பற்றி பரிசீலிப்போம். அதேசமயம், அவரின் உடல்தகுதி மற்றும் ஃபார்ம் பொருத்தே மற்றவை முடிவு செய்யப்படும். ஆனால், அவருக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்றுள்ளார் கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கு பகுதியளவு விலக்கப்பட்டவுடன், கேரளாவின் 23 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியளித்து வந்தார் ஸ்ரீசாந்த்.

“நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, என்னால் மீண்டும் விளையாட முடியும். ஆனால், நாட்டில் விளையாடுவதற்குத்தான் இடமில்லை” என்றிருந்தார் ஸ்ரீசாந்த்.