ஒகி புயல் பாதிப்பு: கேரள முதல்வரை விமர்சித்த டி.ஜி.பி. நீக்கம்

திருவனந்தபுரம்:

கி புயல் பாதிப்பில் கேரள அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அம்மாநில டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சமீபத்தில் தமிழகம், கேரள தென்பகுதிகளை ஒகி புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் தமிழகத்தில் குமரி மாவட்டம் பெருமளவு சேதமடைந்தது. கேரளாவிலும் இப்புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. மீனவர்கள் பலர் காணாமல் போயினர்.

இந்த நிலையில் கேரள டி.ஜி.பி.யாக உள்ள ஜேக்கப் தாமஸ், கேரள அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து கடந்த 9-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேக்கப் தாமஸ், “ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மீனவர்கள் அல்லாமல் வசதி படைத்தவர்களாக இருந்திருந்தால் அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்திருக்கும். ஆட்சியாளர்கள், ஊழல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு அதிகாரம் செய்கினறனர். அப்படி இருக்கையில் இவர்களால் எளிய மக்களிடம் எப்படி நம்பிக்கை பெற முடியும்” என்று பேசினார்.

இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இன்று ஜேக்கப் தாமஸ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.