96 வயதில் கல்வி கற்கும் பாட்டியம்மாவுக்கு கேரள அரசு கம்ப்யூட்டர் பரிசு

--

திருவனந்தபுரம்

கேரள எழுத்தறிவு இயக்கத்தின் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டியம்மாவுக்கு கேரள் அரசு கம்ப்யூட்டர் பரிசளித்துள்ளது.

சமீபகாலமாக 96 என்னும் பெயர் தமிழ்நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. அது ஒரு திரைப்படம் குறித்த விமர்சனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் நாடெங்கும் அதை விட அதிகம் பேசப்படும் மற்றொரு 96 கேரளாவை சேர்ந்த 96 வயது மூதாட்டி கார்த்தியாயினி அம்மா என்பவர்தான்.

இவர் சமீபத்தில் கேரளாவில் நடந்த எழுத்தறிவு இயக்கத் தேர்வில் கலந்துக் கொண்டு 98% மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த வயதில் இவ்வாறு சாதனை புரிந்த கார்த்தியாயினி அம்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை சட்டப்பேரவைக்கு அழைத்து கவுரவித்தார்.

அப்போது கார்த்தியாயினி அம்மா தனக்கு சிறு வயதில் இவ்வாறு வாய்ப்பு கிடைத்திருந்தால் கணினித் துறையில் சாதானை புரிந்திருப்பேன் எனவும் தற்போது கணினி ஒன்றை வாங்கி அதை கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு உடனடியாக பலன் கிடைத்துள்ளது.

கேரள கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அவர் இல்லத்துக்கு சென்று ஒரு கணினியை பரிசளித்தார். அத்துடன் அதை இயக்குவது பற்றியும் பாட்டியம்மாவுக்கு சொல்லிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த கார்த்தியாயினி அம்மா விரைவில் தாம் கணினியை மேலும் நன்கு இயக்க கற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.