திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்துக்குள்  அன்னாசிப் பழத்துக்குள் வெடிவைத்ததால், பலத்தகாயமுற்று இறந்த கர்ப்பிணி யானை விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரல் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை மற்றும் வனத்துறையினர்,  இதுஒரு எதிர்பாராத விபத்தாக இருக்கலாம் என்று சந்தேக்கப்படுவதாக கூறப்படுகிறது.

யானை இறந்த விவகாரத்தில்,  மத்தியஅரசு கேரள அரசிடம்  எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை கோரியுள்ளது. இந்த நிலையில்,  கேரள அரசும் விசாரணையை முடுக்கி உள்ளது.

கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்று, பசியோடு அந்த பகுதியில் சுற்றி வந்த நிலையில், அருகே உள்ள கிராமத்துக்குச் சென்றபோது,  அங்குள்ளவர்கள், பன்றிகளுக்கு வைக்கப்படும் வெடியை அன்னாசி பழத்துக்குள் வைத்து, யானைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அன்னாசிப் பழத்தை சாப்பிட்ட அந்த யானை, பழத்திற்குள் வைக்கப்பட்ட  வெடி வெடித்ததால், அதன்  நாக்கு, வாய்ப்பகுதிகள் சேதமடைந்து கடும் பாதிப்புக்குள்ளானது. வலி  தாங்க முடியாமல் அந்த பகுதியில் இருந்த பள்ளத்தாக்கில் தண்ணீருக்குள் இறங்கி நின்று தவித்தது.

காயம்பட்ட யானையை மீட்க வனத்துறை முயன்ற நிலையில்,  வெளியே வர மறுத்த அந்த கர்ப்பிணி யானை, தண்ணீருக்குள்ளேயே ஜலசமாதி அடைந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்தே யானையின் இறப்பு தேசிய அளவில் கவனம் பெற்றது.

பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, அருகே உள்ள  மன்னார்காடு வனச்சரகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

விசாரணையில் அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொடுத்தது யார் என்பது குறித்து சரியான தகவல் கிடைக்காத நிலையில்,  அந்தப்பகுதியில்  பயிர்களை அழித்துக் கொண்டிருக்கும் காட்டுப் பன்றிகளுக்கு, இதுபோல் பழத்துக்குள் வெடி வைக்கப்பட்டு கொல்லப்படுவதாகவும், அதற்கு  வைக்கப்பட்ட குறி தவறுதலாகவோ, எதிர்பாராத விதமாகவோ யானைக்கு கிடைத்திருக்கலாம்  மலப்புரம் மாவட்ட வனத்துறையினர் சந்தேகம்  தெரிவித்து உள்ளனர்.

வனவிலக்குகள் அதிகமாக சுற்றித்திரியும் அந்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள்,  காட்டு விலங்குகள் தங்கள் பயிரைச் சேதப்படுத்தாமல் இருக்க இரண்டு அடிக்கு முள்வேலி அமைத்து, அதனூடே வெடிப் பொருள்களை வைப்பதை வழக்கமாக வைப்பதும், விஷம் தடவிய அல்லது வெடிவைத்த பழம், காய்களை வைப்பதும் வாடிக்கை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்தப்பகுதியைச் சேர்ந்த வனஅலவலர் ஒருவர்,   “அன்னாசிப் பழத்தை யாரும் நேரடியாக யானைக்குக் கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவில்லை.

யானை நேரடியாகப் பழத்தைக் கடித்ததா அல்லது வனவிலங்குகளுக்கு முள்வேலியில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பழத்தை கடித்ததா எனவும் விசாரித்து வருகிறோம்.  யானை தண்ணீரில் இருந்துதான் மீட்கப்பட்டது. அதனால் அதற்கு வெடிவைக்கப்பட்ட இடத்தை சரியாக சொல்லமுடியவில்லை. அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்”  என்று தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் முதற்கட்ட விசாரணை தகவல்களை  பார்க்கும்போது, யானை இறந்தது, தற்செயல் விபத்து என்றே கூறப்படும் நிலை உருவாகி இருப்பதை தெளிவுபடுத்துகிறது.

முழு படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரளாவில், இதுபோன்ற கொடுமையான செயல் நடைபெற்றிருப்பது உலக அரசில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.