கேரள வெள்ளம்: நாய்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்த பெண்மணி

பெருவெள்ளத்தில் சிக்கிய மனிதர்களைக் காப்பாற்றுவதே பெரும் போராட்டமாக இருக்கும் வேளையில் தான் வளர்க்கும் தெரு நாய்களுக்காக பெண்மணி ஒருவர் தனது உயிரை பணயம் வைத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. ரயில் , மெட்ரோ ரயில்,  பேருந்து, விமான போக்குவரத்துகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

மாநிலத்திலுள்ள 80 அணைகளும் நிரம்பியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

1,500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில்  2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய நம்மை காக்க எவரேனும் வரமாட்டார்களா என்று ஒவ்வொரு பகுதியிலும் தவிக்கும் மக்கள் ஏரோளமானோர்.

இந்த நிலையில், மீட்பு குழு ஒன்று மீட்க வந்தும் தனது வீட்டில் இருக்கும் நாய்களை விட்டு விட்டு தன்னால் வர முடியாது என்று பெண் ஒருவர்  மறுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின் திருச்சூரில் பகுதியில் வசிப்பவர் சுனிமதா என்கிற பெண்மணி.  இவர் தனது வீட்டில் கைவிடப்பட்ட 25  தெருநாய்களை பாசத்துடன் வளர்த்துவந்தார்.

இந்த நிலையில் சுனிதாவின் வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நீர் மட்டம் உயர்ந்து வந்தது.  அங்கு வந்த மீட்பு குழுவினர் சுனிதாவை வெளியே வரும்படி கூறியுள்ளனர்.  அவர் தன்னுடன் நாய்களையும் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.

அதற்கு மீட்புக்குழுவினர் தற்போது நாய்களை எல்லாம் மீட்கும் அளவுக்கு தங்களிடம் உபகரணங்கள் இல்லை  என்றும்  விலங்கு நல அமைப்புகளிடம் உடனடியாக சொல்லி நாய்களை மீட்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் சுனிதாவை மட்டும் வரும்படி அழைத்தனர்.

ஆனால் சுனிதாவோ அவர்களை அனுப்பி விட்டு, நாய்களுடன் அதே வீட்டில் தங்குவது என்று முடிவெடுத்தார். மீட்புக்குழுவினர் வற்புறுத்தியும், நாய்களைவிட்டு தன்னால் வர முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

மீட்புக்குழுவினர் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர்.  அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் சுனிதாவின் வீட்டில் தண்ணீர் புக ஆரம்பித்தது. தடுப்புகளை வைத்தும் , கதவுகளை பூட்டியும் தடுக்க முனைந்தார். ஆனால் நீரின் அளவு வேகவேகமாக உயர்ந்தது.

இந்த நிலையில் சுனிதா விலங்குகள் நல அமைப்பு ஒன்றின் உதவியை நாடினார்.   இதையடுத்து அந்த குழுவினர் அங்கு வந்து நாய்களை மீட்டனர்.

அதன் பிறகும் ஒரு சிக்கல்.

நிவாரண முகாமில், விலங்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுனிதா வலியுறுத்தவே அவரும் அவரது கணவர் மற்றும் நாய்கள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இத்தனை நாய்களையும் எப்படி வளர்த்தீர்கள் என அதிகாரிகள் வியப்புடன் கேட்டனர். அதற்கு சுனிதா, “இவை அனைத்தும் கைவிடப்பட்ட தெரு நாய்கள். தவிர வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 2 நாய்களும் இவற்றில் உண்டு” என்றார்.

தெருநாய்களுக்கு ஆதரவு அளித்து வளர்த்ததோடு  அவற்றை வெள்ளத்தில் இருந்து காப்பாற் தனது உயிரையும் பணயம் வைத்த சுனிதாவை சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.