கேரள வெள்ளப்பாதிப்பு: நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி
சென்னை:
கேரள மாநிலம் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள மக்கள் நிவாரணத்துக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
கேரளாவில் பொழிந்து வரும் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. மாநிலம் முழுவதும் 8,316 கோடி ரூபாய் அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக கேரள அரசு தெரிவித்திருந்தது. பொதுமக்களும் நிதி உதவி அளிக்க கேரள முதல்வர் பிரனாயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள வெள்ளத்தை கடந்த 12ந்தேதி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் கேரள முதல்வர் ரூ.400 கோடி உடடினயாக தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கேரள மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதுபோல திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஷால் கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
மேலும் பல்வேறு நடிகர் நடிகைகள் மற்றும் தனியார் அமைப்புகள் கேரளாவுக்கு நிதிகள் வழங்கி வருகின்றன.