வெள்ள சேத மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி: கேரள மாநில நிதித்துறை கணக்கெடுப்பில் தகவல்

திருவனந்தபுரம்:

கேரளாவில் மழை வெள்ளம் காரணமாக  ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.35ஆயிரம் கோடி என்றும்,  புணரடைப்புக்கு மேலும் 4500 கோடி செலவாகும் என்று மாநில நிதித்துறை கணக்கெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக  கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பேய்மழை கொட்டியது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் காரணமாக பல பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். தற்போது மழை குறைந்த நிலையில்,  நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

கேரள மாநில அரசின் வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் பல மாநிலங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மற்றும் சேதம் குறித்து மாநில அரசின் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுனர்.  மழையால் சேதமான சாலைகள், பாலங்கள் அவற்றின் சேதமதிப்பு  குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில்,  கேரளாவில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர கேரளாவிற்கு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி ஆகும் என்று நிதித்துறை தெரிவித்துள்ளது.

வருடாந்திர திட்ட மதிப்பீட்டின்படி 2018-2019-ம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்ட மதிப்பீடு ரூ.29,150 கோடி என்றும் இதில் மற்ற செலவினங்களையும் சேர்த்தால் ஆண்டு செலவினம் ரூ.37,273 கோடியாகும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

தோராயமாக மாநில பாதிப்பு செலவினம் ரூ.35 ஆயிரம் கோடி என்று நிதித்துறை கூறி உள்ளது.

அதிகபட்சமாக சேதமான சாலைகள் சீரமைப்புக்கு மட்டும் ரூ.4,500 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல மின்கம்பங்கள் முறிந்தது மற்றும் மின்சார கட்டமைப்பை சீரமைக்க மட்டும் ரூ.750 கோடி, குடிநீர் திட்டங்களுக்கு ரூ.900 கோடி செலவாகும் என்றும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொச்சி விமான நிலைய சீரமைப்புக்கான நிதி பற்றிய அறிக்கை தயாராகவில்லை. அதுவும் தயாரானால் சேத மதிப்பு இன்னும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.