கேரள மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த இரண்டு வாரமாக வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் கேரளாவை கடும் மழை வெள்ளம் மிரட்டி வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பலபகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில பகுதிகளுக்க மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. அங்கு கனமழையால் ஏற்பட்டுள்ள   காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவின மீட்டு வருகின்றனர்.

நிலாம்பூர் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா என்ற இடத்தில் ஏற்கனவே 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று 2 பேரின் சடலங்களும், வயநாட்டின் புத்துமலா என்ற இடத்தில் ஏற்கனவே 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டன.

இந்த பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளதால், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்னு என்ற இடத்திலும் 2 பேரது சடலம் மீட்கப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சிக்கிய 52 பேரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இடுக்கி அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1.65 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும், இலவசமாக கொண்டு செல்லலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், எர்ணாகுளம் – கோவை இடையே நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளது. அதுபோல வெள்ளம் காரணமாக மூடப்பட்ட கொச்சி விமான நிலையமும் இன்று திறக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி