கேரள வெள்ளம் : முதற்கட்டமாக சுமார் ரூ.70 கோடி அளிக்கிறது சவுதி

ரியாத்:

ன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு முதற்கட்ட உதவியாக சுமார் ரூ.70 கோடி ரூபாய் அளிக்க உள்ளது சவுதி அரேபிய அரசு.

கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

அணைகளில் நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பல பகுதிகளில், ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 324 பேர் பலியானார்கள்.  மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை.

நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், பத்தினம் திட்டா, திரிச்சூர் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் பல ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன.

இந்நிலையில் கேரள மக்களுக்கு பல்வேறு மாநிலங்களும், மத்திய அரசும் நிவாரண உதவி அளித்துள்ளன. பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  சவுதி அரேபிய அரசும்  நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளது. மேலும் உதவிக் குழு அமைத்திட தேசிய அவசர அமைப்புக்கு சவுதி அரசு உத்தரவிட்டது.

அதோடு,  கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளிக்கிறது.   1கோடி டாலர் என்பது 69 கோடியே 80 லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.