வீடுகளினுள் படையெடுக்கும் விஷப்பாம்புகள் – 5 நாட்களில் 53 பேர் பாம்புக்கடியால் மருத்துவமனையில் அனுமதி

மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 53பேர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளின் அலமாரி மற்றும் குளியலறையில் விஷப்பாம்புகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

gopra

50 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பொழிந்துள்ளதால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. கடந்த 20 நாட்களாக அதிக கனமழை பொழிந்து கேரள மாநிலத்தையே புரட்டி எடுத்தது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளநீரினால் சூழப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம் களில் தங்க வைக்கப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மாநிலம் முழுவதும் வெள்ளநீர் சூழப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் பணியில் விமானப்படை, ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். மீனவர்கள் விசைப்படகுகள் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதினால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழப்பட்டதால் மக்கள் அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மழையின் அளவு குறைந்த நிலையில் ஒரு சில மாவட்டங்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன. இருப்பினும் மக்களிடையே புதிய அச்சம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதுதான் விஷப்பாம்புகள். குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழப்பட்டதால், மலைப்பகுதி மற்றும் அடந்த காட்டுப்பகுதிகளில் வசித்து வந்த விஷப்பாம்புகள் வீடுகளின் அலமாரிகள், குளியலறைகள், சமையலறைகள், துணிகள், விரிப்புகள் மற்றும் காலணிகளில் தஞ்சம் அடைய தொடங்கியுள்ளன.

snake

மழைநீரில் வந்த விஷப்பாம்புகளான ராஜநாகம், கட்டுவிரியான் மற்றும் மலைப்பாம்புகளினால் ஏராளமானோர் தீண்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை 53 பேர் பாம்பு கடியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பெரும்பாலானவை ராஜநாகம், மலைப்பாம்பு, கட்டுவிரியான், கண்ணாடி விரியான் பாம்புகள் என கூறப்படுகிறது. இவை அனைத்துமே அதீத விஷத்தன்மை நிறைந்தவை. வனத்துறையினருக்கும், பாம்பு பிடிக்கும் நபருக்கும் அவ்வபோது தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தண்ணீர் சூழந்த பகுதியில் இருக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்கும்படி மருத்துவமனை சார்பாகவும், வனத்துறை சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.