உயர்மட்ட ஆட்கள் தொடர்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின் போக்கு, தற்போது, பாரதீய ஜனதாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. மாநிலத்தை ஆளும் சிபிஎம் அரசை, இதுதொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகிறது பாரதீய ஜனதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கட்டுரையாளர் கே.எம்.ராகேஷ் குறிப்பிட்டுள்ளதாவது; தேசிய புலனாய்வு ஏஜென்சி பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் நாயர், பாரதீய ஜனதாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
மேலும், சரக்கு பரிசோதனை ஏஜென்சியின் உரிமையாளரும், 30 கிலோ தங்கம் அடங்கியிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கான பார்சலை பெற முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவருமான ஒ.ஜி.ஹரி ராஜ், சங்பரிவார் சித்தாந்தத்தில் ஈர்ப்புடையவர் என்ற தகவல் சமூக ஊடகம் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் பி.எஸ்.சரித், விசாரணையில் குறிப்பிட்ட சந்தீப் நாயர், கேரளாவின் மூத்த பாரதீய ஜனதா தலைவர் கும்மனம் ராஜசேகரனுடன் கட்டிப் பிடித்து எடுத்துக்கொண்டு புகைப்படத்தை வைத்துள்ளார்.
இந்த சந்தீப், தங்கள் கட்சிக்கு தொடர்புடையவரல்ல என்றும், அது வெறுமனே சாதாரண புகைப்படம்தான் என்றும் பாரதீய ஜனதாக் கட்சி கூறிவந்த நிலையில், சந்தீப்பின் தயார், தன் மகன் கட்சியின் தீவிர உறுப்பினர் என்று ஊடகங்களிடம் உறுதிபடுத்தியது அக்கட்சிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
தங்கம் அடங்கியிருந்த பார்சலை, விமான நிலையத்தில் வைத்திருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, உரைச் செய்தி(text message) அனுப்பிய ஹரி ராஜ், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய பாரதீய மஸ்தூர் சங்கத்துடன் தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
ஆனால், “சரக்கு பரிசோதனை ஏஜெண்ட்டுகள் அமைப்பின் தலைவர் என்ற முறையில், ஒரு பார்சல் எதற்காக விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளது என்பதன் காரணத்தை அறிந்துகொள்வதற்காகவே தான் சுங்க அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதாகவும், மற்றபடி அந்தப் பார்சலில் என்ன இருந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது” என்றும் தெரிவித்துள்ளார் ஹரி ராஜ்.
அதேசமயம், தான் எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லையென்றும், இது அரசியல் விளையாட்டு என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இவரின் சமூக வலைதள செயல்பாடுகள், மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மீதான அபிமானத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பாரதீய ஜனதாவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் முரளிதரன் விடுத்த அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளதையும் தேசிய புலனாய்வு ஏஜென்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, கேரளத்தின் சிபிஎம் அரசை இந்த தங்கக் கடத்தல் வழக்கை காரணம் காட்டி தீவிரமாக கார்னர் செய்யலாம் என்று திட்டமிட்ட பாரதீய ஜனதா, தற்போது சூழல்கள் தனக்கு எதிராகவே திரும்பியுள்ளதைக் கண்டு விக்கித்துள்ளது என்றுள்ளார்.