கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு ஜூலை 15ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பெட்டிகளை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 30 கிலோ தங்கம் சிக்கியது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தினர். அதில், கேரள தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட விசாரணை சூடுபிடித்தது. கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் அக்டோபர் 29 ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவினை, கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.