கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர்மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான ஷரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகம் பெயரில் கேரள மாநிலத்தில் தங்கம் கடத்தப்பட்டு வந்து செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களில் பலர்,  கேரள மாநில அரசில் பணியாற்றியதும் தெரிய வந்தது. இது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தியது. விசாரணையில், , மாநில ஐடி துறை செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மட்டுமின்றி  முதல்வரின் தனிச்செயலாளர் சிவசங்கரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இநத் நிலையில்,  தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் உட்பட 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அதிகமான தங்கத்தை கடத்த திட்டமிட்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் தங்களது கடந்தகால தொடர்பை பயன்படுத்தி இந்த முறைகேட்டில் ஈடுபட்டு, தங்கத்தை கடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் சரித் பெயர் முதலாவது இடத்திலும், ஸ்வப்னா சுரேஷ் பெயர் இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது மேலும் ரமீஸ் கே.டி. கே.வி., அப்துல் ஹமீத், ஷம்ஷுதீன் ஆகியோரும் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆரம்பத்தில் நான்காவது குற்றவாளியாக பெயரிடப்பட்ட சந்தீப் நாயர் அப்ரூவராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.