கொச்சின்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரும், தேசிய புலனாய்வு ஏஜென்சியால் பெங்களூருவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இந்த இருவரும், கொச்சியில் அமைந்த தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில், தங்கக் கடத்தல் விவகாரம் கண்டறியப்பட்டதிலிருந்து, மேற்கண்ட இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்த விவகாரம், தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தை உலுக்கி வருகிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசை, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த வழக்கு, கடந்த வெள்ளியன்று, தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, “தான் குற்றமற்றவர் என்றும், அதேசமயம் எந்தவித விசாரணைக்கு தயார்” என்றும் ஸ்வப்னா பேசியிருந்த ஆடியோ ஒன்று தொலைக்காட்சி சேனலில் வெளியாகியிருந்தது.
ஸ்வப்னாவிற்கு, ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகம் மற்றும் கேரள மாநில முன்னாள் ஐடி செயலாளர் சிவசங்கர் ஆகியோருடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.