கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல்: ஸ்வப்னாவின் கூட்டாளி பரீத் துபாயில் கைது

திருவனந்தபுரம்: 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவர் உறவினர் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரையும் வரும் 21ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக கருதப்படும் பைசல் பரீத் துபாயில் உள்ளார். அவரை கைது செய்வதற்காக துபாய் போலீசாரின் உதவியைம், சர்வதேச போலீசார் உதவியையும் என்ஐஏ அதிகாரிகள் நாடியிருந்தனர். வேறு நாடுகளுக்கு தப்பிவிடாமல் இருக்க அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இந் நிலையில், பைசல் பரீத் துபாயில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.