நாட்டையே உலுக்கிய கேரளா தங்கம் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைப்பு

கொச்சி: நாட்டையே உலுக்கி வரும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கியது. கடத்தல் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூதரக முன்னாள் ஊழியரும், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவன அதிகாரியுமான ஸ்வப்னா சுரேஷ் என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

அவர் தலைமறைவாக உள்ளார். அவரையும், அவரது நண்பரையும் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ள அந்த மனுவில் அவர், தங்கம் கடத்தல் சம்பவத்துக்கும், தமக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுக்க உள்ளதால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரிக்க முடியாது. ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றே விசாரிக்க முடியும் என்று வாதிட்டார். இதையடுத்து, விசாரணை வரும் செவ்வாய்கிழமை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.