சீரமைப்பு பணிக்கு உலக வங்கியிடம் ரூ.3,000 கோடி கடன் வாங்க கேரளா அரசு முடிவு

திருவனந்தபுரம்:

வெள்ள பாதிப்புகளை சீரமைக்க உலக வங்கியிடம் ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வாங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்துவிட்டது. 384 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரம் கி.மீ. சாலைகள், 39 பாலங்கள் சேதமடைந்துள்ளது. சேத மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும், மறுகட்டமைப்புக்கு ஏற்படும் செலவும் குறித்தும் முதல்வர் பினராய் விஜயம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இவற்றை மறுகட்டமைக்க தோராயமாக ரூ. 20 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு சீரமைப்புக்கு உதவுமாறு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிற மாநில அரசுகள் நிதியுதவி அளித்துள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவியை பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. கேரளாவின் பாதிப்புகள் உள்நாட்டு நிதியை கொண்டே சீரமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் கோடி தேவை என்று கேரளா அரசு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு ரூ.600 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை புணரமைக்க உலக வங்கியிடம் ரூ.3 ஆயிரம் கோடி கடன் வாங்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.