திருவனந்தபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட மாநில ஆளுநர் ஆரிப் முகமத்கான் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி டிசம்பர் 31ந்தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மத்தியஅரசின் சட்டத்துக்கு எதிராக  சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

இந்த நிலையில், கேரள   மாநில அரசும், டிசம்பர் 24ந்தேதி அன்று சிறப்பு சட்டமன்றத்தை  கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்போவதாக அறிவித்தது.  அது தொடர்பாக, ஆளுநருக்கு  கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் மாநில அரசின் கோரிக்கையை  ஏற்க மறுத்துவிட்டார்.  இதனால் சிறப்பு கூட்டம் நடைபெறுவது தடைபட்டது.

இதைத்தொடர்ந்து,  மாநில சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோர் கவர்னர் ஆரிப் முகமத்கானை சந்தித்து
சுமார் அரை மணி நேரம பேசினர்.

இந்த நிலையில், தற்போது ஆளுநர் ஆரிப் முகமதுகான் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து,  டிசம்பர் 31ந்தேதி கேரள சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது.