திருவனந்தபுரம்: சமூகவலைதளங்களில், அவமதிக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான பதிவுகளை இடுவோருக்கு, 5 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் கேரள சட்டசபை நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.

அதாவது, கேரள காவல்துறை சட்டத்தின் திருத்தப்பட்ட அம்சமாகும் இது. இந்த திருத்தத்தின் அடிப்படையில், 118-A என்ற ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மேற்கூறிய சமூகவலைதள குற்றங்களுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10000 அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.

மேலும், இந்தப் புதிய சட்டமானது, மேற்கண்ட விஷயங்களில் தன்னிச்சையாகவே நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரமளிக்கிறது.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம், அவதூறு உள்ளிட்டவைகளிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்று விபரம் வெளியிட விரும்பாத அதிகாரிகள் வட்டத்தினர் தெரிவித்தனர்.

இன்றைய நிலையில் அதிகரித்துவரும் சமூகவலைதள முறைகேட்டு குற்றங்களை தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.