திருவனந்தபுரம்

கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கேரள அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.   அதை மத்திய அரசுக்கு அனுப்ப அவர் மறுத்தார்.  இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டம் தொடங்கியது.  இதில் முதல் நாளான இன்று ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையுடன் அவை தொடங்கியது.

ஆளுநர் தனது உரையில்,வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் இழப்பு அடைவார்கள் எனவும் கார்ப்பரேட்டுகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் என தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் அரசு இயற்றிய தீர்மானத்தை முழுமையாக அறிவித்து தனது உரையில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.  அத்துடன் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்களையும் தனது உரையில் சாடி உள்ளார்.

மேலும் அவர் தனது உரையில். “மத்திய அரசின் சில நடவடிக்கைகள் மாநில அரசுகளின் கருத்துக்கு விரோதமாக இருந்த போதிலும் ஆளுநர் என்னும் முறையில் மாநில அரசின் கருத்துக்களை உரையில் தெரிவிப்பது எனது கடமை ஆகும். எனவே நான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கேரள அரசின் கருத்துக்களையும் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும் கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் சட்டப்பேரவை உரையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போதும் இதே சமாதானத்தை அவர் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்,.