திருவனந்தபுரம்

கேரள அரசுத்துறைகளில் இனி “தலித்” மற்றும் “ஹரிஜன்” என்னும் வார்த்தைகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் பலத் துறைகளில் பல செய்திகளிலும்  பல ஆய்வுகளிலும் தலித் மற்றும் ஹரிஜன் என்னும் வார்த்தைகள் பயன்பாட்டில் உள்ளது.  அது மட்டுமின்றி மலையாள வார்த்தையான்ச் “கீழாளர்”  என்பதும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.   அந்த இனத்தை சேர்ந்த மக்கள் இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதால் தங்களுக்கு மன வருத்தம் உண்டாகிறது என்றும்,  அது தங்களை தனிமைப்படுத்துவது போல உள்ளதாகவும் தெரிவித்ததாக அரசு கூறுகிறது.

அதனால் அந்த வார்த்தைகள் உபயோகிப்பதை கேரள அரசு தடை செய்துள்ளது.   இனி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்னும் வார்த்தைகள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என அனைத்து அரசுத்துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதை அந்த மக்கள் உண்மையில் வரவேற்கவில்லை.   ”தலித் என்ற சொல்லில் எங்களைக் குறிப்பதில் ஏதும் தவறில்லை எனவும் அந்த வார்த்தை எல்லா மதங்களுக்கும் பொதுவானது    அம்பேத்கர் மற்றும் மகாத்மா பூலே ஆகியோர் பயன்படுத்தியது அந்தச் சொல். காந்தி பயன்படுத்திய ஹரிஜன் என்னும் சொல்லை மட்டுமே நாங்கள் விரும்பவில்லை.   தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்பது பிரிட்டிஷாரால் குறிப்பிடப்பட்டது.   அது எங்களுக்கு பிடிக்கவில்லை” என தலித் இன தலைவர்கள் கூறி உள்ளனர்.