மீடியா நிருபர்கள் மைக் பயன்படுத்த தடைவிதித்தது கேரள அரசு!

திருவனந்தபுரம்: தொலைக்காட்சி நிருபர்கள் ‘மைக்’ பயன்படுத்தி கேள்விகள் கேட்கக்கூடாது என்ற புதியவகை உத்தரவை, கொரோனா அச்சம் காரணமாக கேரள அரசு பிறப்பித்துள்ளது.

நிருபர்கள் மைக்குகள் பயன்படுத்திப் பேட்டி எடுக்கும்போது, பேசுபவரின் உமிழ்நீர், மைக்குகளில் பட வாய்ப்புள்ளது. அதே மைக்குகளை வேறு ஒருவரிடம் பேட்டி எடுக்கப் பயன்படுத்தும்போது, முந்தைய நபருக்கு வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவருக்கும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது.

அதனால், தொலைக்காட்சி நிருபர்கள் மைக் பயன்படுத்தி பேட்டி எடுப்பதற்கு கேரளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால், கேரளாவில் 5,191 பேர் வீடுகளிலும், 277 பேர் மருத்துவமனைகளிலும் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். இதன்மூலம் இதுவரை 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.