திருவனந்தபுரம்

றுத்த கடலை, மிக்சர் போன்ற எந்த ஒரு உணவுப் பண்டத்தையும், ரோடு ஓரக் கடைகளில் கூட பழைய செய்தித்தாளில் கட்டிக் கொடுக்கக் கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது,

இந்திய உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உணவுப் பொருட்கள் பழைய செய்தித்தாள்களில் கட்டித் தருவது தவறு என கூறியது.  செய்தித்தாள்களில் உள்ள மை உணவுப் பொருள்களில் கலந்து அது மக்களுக்கு கேடு விளைவுக்கும் என தெரிவித்திருந்தது.

அதையொட்டி, கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் எந்த ஒரு உணவுப் பொருளும் அச்சடித்த காகிதத்தில் கட்டித் தரக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் சாலை ஓரங்களில் விற்கப்படும் கடலை போன்றவைகளுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

கேரளாவின் உள்துறை அமைச்சர் ஜலீல் இதையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓட்டல்கள், உணவு விடுதிகள், காய்கறி மற்றும் பழக்கடைகள் விரைவில் தங்களின் குப்பைகளை அழிக்கும் நிலையங்களை அவர்களே அமைத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.  அதற்கான அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப் படும்.  செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேலும் அமைக்காதவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்.” எனக் கூறி உள்ளார்.

மேலும், “பொதுவான குப்பை அழிக்கும் நிலையங்களை அரசு நடத்தி வருகிறது.  ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினாலோ, அல்லது பழுதினாலோ இவை ஒரு நாள் வேலை செய்யாவிட்டாலும் குப்பைகள் மலை போல் சேர்ந்து விடுகின்றன.  அதனால் தனியார் இது போல குப்பை அழிக்கும் நிலையங்கள் அமைப்பதை அரசு மிகவும் வரவேற்கிறது.  கொச்சியில் அதுபோல ஒரு நிலையம் அமைக்கப்பட உள்ளது.  கோழிக்கோட்டிலும் ஒரு நிலையம் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது” எனக் கூறினார்.