திருவனந்தபுரம்: கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனா மறைவையொட்டி 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்துள்ளார்.

பிரபல கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவுக்கு 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீட்டில் சிகிச்சையில் இருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, நேற்று உயிரிழந்தார்.

உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மாரடோனா, 4 உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி அசத்தி உளார்.  அவரின் மறைவு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாரடோனா மறைவையொட்டி கேரள மாநில விளையாட்டுத் துறையின் சார்பில் இன்று முதல் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக  விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: மாரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேரளாவில் உள்ள ரசிகர்கள் அவரின் மறைவை நம்ப முடியாமல் உள்ளனர் என்று கூறினார். 2012ம் ஆண்டு அக்டோபரில் மாரடோனா கேரளா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.