திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நடத்த உரிமம் பெற்ற அதானி குழுமத்தின் மீது கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சர்வதேச விமான நிலையங்களை நடத்த மத்திய அரசு சமீபத்தில் டெண்டர் கோரி இருந்தது.   அதில் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு மற்றும் திருவனந்த புரம் ஆகிய விமான நிலையங்களை நடத்தும் பணிக்கான உரிமம் அதானி குழுமத்துக்கு கிடைத்துள்ளது.   இந்த ஐந்து இடங்களிலும் அந்த குழுமம் அதிக விலைப்புள்ளி அளித்ததால் இந்த உரிமம் அளிக்கப்பட உள்ளது.

கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட திருவனந்த புரத்துக்கான டெண்டர் படிவங்களில் அதானி குழுமம் ஒரு பயணிக்கு ரூ.168 வீதம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.  கேரள அரசின்  கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் ரூ.135 ம் ஜி எம் ஆர் குழுமம் ரூ.63ம் கோரி இருந்தது.

அதானி குழுமத்துக்கு கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “கவுதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 5 விமான நிலையங்களை நடத்தும் உரிமம் வழங்க உள்ளதாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.  அதானிக்கு விமான நிலையத்தை நடத்த தெரியாது.   ஆனால் பிரதமர் மோடியை நன்றாக தெரியும்.

இந்த டெண்டர் நடத்தப்பட்ட வழிமுறைகள் மிகவும் மர்மமாக உள்ளது.  அத்னால் தான் அதானிக்கு ஐந்து விமான நிலையங்களுக்கான உரிமம் கிடைத்துள்ளது.   இதை எதிர்த்து அதானி குழுமம் மீது கேரள அரசுத் துறையான கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.