குடிமகன்களுக்கு வீடு தேடி  ’வாரம் 3 லிட்டர் சரக்கு

ஒரே நேரத்தில் கேரள முதல் –அமைச்சர் பினராயி விஜயன் தோளில் இரு சுமைகள்.

கொரோனா நோயாளிகளையும் பிழைக்க வைக்க வேண்டும்.

கொரோனா காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் ,பக்க விளைவுகள் ( வித்டிராவல் சிம்டம்) ஏற்பட்டு தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படும் குடிமகன்களையும் காப்பாற்ற வேண்டும்.

‘’டாக்டர்கள் மருந்து சீட்டு ( பிரிஸ்கிருப்ஷன்) இருந்தால், மது வழங்கலாம்’’ என பினராயி முதலில் கூறி இருந்தார்.

‘அப்படியெல்லாம் சீட்டு வழங்க மாட்டோம்’’ என்று டாக்டர்கள் சிவப்பு கொடி பிடித்ததால்-

‘ இவருக்கு ‘ வித்டிராவல் சிம்டம் ‘ உள்ளது’’ என்று அரசு டாக்டர்கள் சான்றிதழ் கொடுத்தால், அந்த குடிமகன்களுக்கு,’ ஸ்பெஷல் பாஸ்’ வழங்கப்பட்டு,  மது விநியோகம் செய்யப்படும்’’ என்று மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நேற்று ஒரே நாளில் டாக்டர்கள் ‘சர்பிகேட்’ பெற்று கேரள கலால் துறையில். 30 பேர் ’பாஸ்’ கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

அவர்களுக்கு பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

( சில குடிமகன்கள் ஓய்வு பெற்ற டாக்டர்களிடம் சான்றிதழ் பெற்று வந்திருந்தனர். அவை நிராகரிக்கப்பட்டன)

நம் ஊரில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மது விற்பனை செய்வது போல் கேரளாவில்- ‘பெவ் கோ’’( கேரள அரசு மதுபான கழகம்) மது விற்பனை செய்கிறது.

கலால் இலாகா அளிக்கும் பாஸ்களை, அந்தந்த பகுதியில் உள்ள  ‘பெவ்கோ’ வில் கொடுத்தால்- அவர்கள் குடிமகன்களின் வீட்டுக்கே மது பாட்டில்களை சப்ளை செய்வார்கள்.

ஒரு ’பாஸ்’ வைத்திருப்பவருக்கு  வாரத்துக்கு 3 லிட்டர்  மது கொடுக்கப்படும்.

குடோனில் என்ன சரக்கு இருப்பில் உள்ளதோ, அந்த  சரக்கே வழங்கப்படும்.