திருவனந்தபுரம்

சென்ற 2017 ஆம் ஆண்டு அடித்த ஒக்கி புயலில் மரணம் அடைந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு வேலை வாய்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் அடித்த ஒக்கி புயலால் தமிழகத்தின் தென் பகுதி மற்றும் கேரள மாநிலத்தின் பெரும் பகுதி பாதிப்பு அடைந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலர் வீடிழந்தனர். ஏராளமான மீனவர்கள் மரணம் அடைந்தனர். அதில் சிலரது நிலை என்ன என்பது இன்னும் அறியப்படாமல் உள்ளது.

ஒக்கி புயலால் மரணம் அடைந்த கேரள மீனவர்களுக்கு கேரள அரசு பல உதவி திட்டங்களை உடனடியாக நிறவேற்றியது. மரணமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்தார்.

அதை ஒட்டி ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புயலில் மரணமைந்த மீனவர்களின் வாரிசுகள் 180 பேருக்கு கடற்கரை காவலர் பணி உத்தரவை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கி உள்ளார்.